உத்திரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட சப்த மாதர் சிற்பத் தொகுப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் சு.பாலாஜி தலைமையில் கோகுல சூர்யா, குணசேகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் வேடபாளையம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் சப்த மாதர்களின் அரிய சிற்பத் தொகுப்பு ஒன்றை கண்டறிந்தனர்.
இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் சு.பாலாஜி கூறியதாவது:
வேடப்பாளையம் கிராமம் சித்தேரிக்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு நடுவில் மண்மேடான பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் கள ஆய்வு செய்தபோது அங்கு பல்லவர் கால 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சப்த மாதர் சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தோம். இந்த சிற்பத் தொகுப்பு ஒன்றே முக்கால் அடி உயரத்திலும், 6 அடி நீளத்திலும் காணப்படுகிறது. எழுவர் அன்னையரை வழிபடுவது பெண் தெய்வ வழிபாட்டில் முதல் வழிபாடாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவழிபாடாகவும் இருப்பதாகும்.
பெண் தெய்வ வழிபாடு என்பது வளமையின் அடையாளமாக, வேளாண்மை செழிக்க, செல்வ வளம் பெருக, குழந்தைகள் நோயின்றி வாழ, அரசர்கள் பிற நாட்டை வெற்றி பெற வழிபடுவதாகும். இச்சிலை உடைந்தும், சற்று சிதைவுற்றும் காணப்படுகிறது.
இந்தச் சிலையில் பிராமி, மகேஸ்வரி, நாராயணி, கௌமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்கள் வீற்றிருக்கிறார்கள். இதற்கு அருகிலேயே விஷ்ணு துர்க்கை சிலையொன்றும்உள்ளது. இங்கு கோயில் இருந்ததற்கான அடையாளமாக பெரிய கற்தூண்களும், சிலைகளும் காணப்படுகின்றன. இங்கு ஓர் ஆலயம் இருந்து காலப்போக்கில் அழிந்துபோயிருக்க வாய்ப்புள்ளது. இந்த மண் மேட்டை அகழாய்வு செய்தால் மேலும் பல சிலைகள் கிடைக்கும். இந்தச் சிலைகளை தமிழ் தொல்லியல் துறை அலுவலர்கள் உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்றார்.