தேசிய நெடுஞ்சாலைகளை பசுமையாக்கும் வகையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஈரோடு அரசு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் புத்தாண்டு தினமான இன்று தொடங்குகின்றனர்.
புவி வெப்பமடைதலால் பருவமழை போதுமான அளவு பெய்யாமலும், காற்று மாசுபட்டும் மக்களின் வாழ்க்கை முறையும், உடல்நலனும் பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கச்சாவடிகள் அருகில் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை அரசு போக்குவரத்துத் துறையின்கீழ் செயல்படும் ஈரோடு அரசு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று தொடங்கப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகள், பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் என 5,200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின் தலைவராக சம்பத்குமார் உள்ளார். இந்நிலையில் ‘விதை’ என்ற திட்டத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை இன்று செயல்படுத்த உள்ளது.
இதுதொடர்பாக அச் சங்கத்தின் நிர்வாகியும், ‘விதை’ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான அமுதன் கூறியதாவது:
பசுமை மீட்டெடுக்க..
முன்பெல்லாம் நெடுஞ்சாலைகளின் இருபுறமும் பெரிய அளவிலான மரங்கள் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், இப்போது சாலைகளின் இருபுறமும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதை மாற்றி பசுமையை மீட்டெடுக்கும் வகையில் எங்களின் முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்தோம். இதற்காக ஆயிரக்கணக்கான விதைகளை சேகரித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாற்றங்கால்களில் நட்டு பராமரித்து வந்தோம்.
தற்போது, ஒவ்வொரு மரக்கன்றும் 5 அடி முதல் 7 அடிகள் வரை வளர்ந்துள்ளன. வேம்பு, புளிய மரம், பாதாம், வாகை, நாவல், புங்கன் போன்ற மரக்கன்றுகள் அதிக அளவில் உள்ளன. ‘விதை’ என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைப் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க உள்ளோம்.
மூங்கில் கூண்டுகள் அமைக்கப்படும்
இந்த திட்டத்தை ஜனவரி 1-ம் தேதி (இன்று) தொடங்கவுள்ளோம். இதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்றுள்ளோம். அதன்படி, முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 28 சுங்கச்சாவடிகளில் சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடவுள்ளோம். இந்த மரக்கன்றுகளுக்கு மூங்கிலால் ஆன இயற்கை பாதுகாப்பு கூண்டுகள் அமைக்கப்படும். இதேபோல், அடுத்தடுத்து மற்ற சுங்கச்சாவடிகளிலும் இத் திட்டத்தை செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.