திமுகவினர் உட்பட அனைவரும் வீட்டு வாசலில் கோலம் போடவோ, ஓவியம் வரையவோ, வாழ்த்துக்கள், வரவேற்பு வாசகங்கள் எழுதவோ எந்த தடையும் இல்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை பெசன்ட் நகர் 2-வது நிழற்சாலையில் கடந்த 29-ம் தேதி கல்லூரி மாணவிகள் சிலர் குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமான கோலங்களை வரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ‘நோ என்ஆர்சி’, ‘நோ சிஏஏ’ என்ற வாசகத்துடன் அவர்கள் கோலங்களை வரைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கோலம் போட்ட பெண்களை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். சட்டவிரோதமாக கூடுதல் (143), சட்டவிரோத செயலில் ஈடுபடுதல் (341), தடையை மீறி செயல்படுதல் (188) ஆகிய 3 பிரிவுகளில் அவர்கள் மீது சாஸ்திரி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட பல தலை வர்களின் வீட்டு வாசலிலும், சிஏஏ, என்ஆர்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் தங்கள் வீட்டு வாசலில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக, காங்கிரஸ் கட்சிகளின் மகளிர் அணியினர் இந்த கோலப் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வீட்டு வாசலில் கோலம் போடுவது சட்டவிரோத செயலா? இதற்கு கைது செய்ய முடியுமா என்று கேட்டதற்கு, காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோலம் போடுவது நம் பாரம்பரிய வழக்கம். அதை தடுக்க காவல் துறைக்கு அதிகாரம் இல்லை. திமுகவினர் உட்பட யார் கோலம் போட்டாலும் எந்த சட்ட சிக்கலும் இல்லை. ஆனால், கோலம் என்ற பெயரில் பிரச்சினைக்குரிய வாசகங்களை எழுதுவது, ஓவியங்கள் வரைவது சட்டப்படி தவறு. அவ்வாறு போராட்டத்தை தூண்டும் வகையில் கோலம் போடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது.
பெசன்ட் நகரில் வரையப்பட்ட கோலம், அடுத்தவர்களை வரவேற்கும் விதத்தில் இல்லை. பொது இடத்தில் போராட்டத்தை தூண்டும் வகையில் இருந்ததாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் அழகா புரத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பெண்கள் ஒரே இடத்தில் கூடி குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்களை எழுதி கோலம் போட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றபடி, திமுகவினர் உட்பட யாரும் வீட்டு வாசலில் கோலம் போடவோ, ஓவியம் வரையவோ, வாழ்த்துக்கள், வரவேற்பு வாசகங்கள் எழுதவோ எந்த தடையும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.