சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோயில்கள், தேவால யங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பட்டன. மக்கள் புத்தாடை அணிந்து வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபட்டனர். புத்தாண்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆங்கிலப் புத்தாண்டு ‘2020’ இன்று பிறந்துள்ளது. இதையொட்டி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவுமுதலே புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டியது. சென்னை மெரினா கடற்கரையில் குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் நேற்று இரவு திரண்டனர். இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து உற்சாகமாக வலம் வந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசு வெடித்தும், ஆடிப் பாடியும் புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வசதியாக மெரினா காமராஜர் சாலையில் சாந்தோம் தேவாலயத்தில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய விடுதிகளிலும் பல்வேறு ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடந்தன. பிரதான சாலைகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபடி இருந்தனர்.
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. சென்னை பெசன்ட் நகர் மகாலட்சுமி கோயில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. சென்னை சாந்தோம் பேராலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நள்ளிரவு 11.30 மணி அளவில் சிறப்பு திருப்பலியும் புத்தாண்டு ஆராதனையும் நடந்தன. பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் பிரகாச மாதா ஆலயம் (லஸ் சர்ச்), ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பாரிமுனை தூய மரியன்னை இணை பேராலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.
சிஎஸ்ஐ திருமண்டல தலைமை ஆலயமான கதீட்ரல் பேராலயம், பழமை வாய்ந்த வேப்பேரி புனித அந்திரேயா ஆலயம், மயிலாப்பூர் குட்ஷெப்பர்டு ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு ஆராதனைகள் நடந்தன.
சென்னை புறநகர் பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலியும் ஆராதனையும் நடைபெற்றன. தாம்பரம் பாத்திமா அன்னை ஆலயம், பெருங்களத்தூர் குழந்தை யேசு ஆலயம், ஊரப்பாக்கம் ஆரோக்கிய அன்னை ஆலயம், கூடுவாஞ்சேரி நல்மேய்ப்பர் ஆலயம், காட்டாங்கொளத்தூர் புனித லூர்து அன்னை ஆலயம், மறைமலை நகர் தூய விண்ணரசி அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடை அணிந்து அதிகாலை 3 மணி முதல் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். பக்தர்கள் வருகையைக் கருத்தில் கொண்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக கோயில்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தவண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூர் முருகன், பழநி தண்டாயுதபாணி, மதுரை மீனாட்சியம்மன், காஞ்சி காமாட்சியம்மன், ராமேசுவரம் ராமநாதசுவாமி, திருத்தணி முருகன், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், கந்தகோட்டம் முருகன் கோயில் உட்பட சென்னை முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால், அந்த பகுதிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பண்ணை வீடுகள், நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் உட்பட புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்த அனைத்து இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரமாக இருந்தது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோஷ மிடுவது, போராட்டம் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படு வார்கள் என்று காவல்துறை ஏற்கெனவே எச்சரித்ததால், அதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை.
தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. சென்னையில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. போலீ ஸாரின் எச்சரிக்கையையும் மீறி, பைக் பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குடித்து விட்டு வாகனம் ஓட்டி பிடிபட்ட வர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. டிரோன்கள், கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பொதுமக்கள் உன்னிப்பாக கண்காணிக்கப் பட்டனர். சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள 75 முக்கிய மேம்பாலங்கள் மூடப் பட்டன. சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப் புப் பணியில் ஈடுபட்டனர்.