தமிழகம்

ஊழல் புகார்கள் தொடர்பாக பிரதமர் மவுனம் காப்பது ஏன்? - இந்திய கம்யூ. பொதுச் செயலர் கேள்வி

செய்திப்பிரிவு

பாஜக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் கடந்த இரு தினங்களாக நடந்தது. இறுதி நாளான நேற்று கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸை ஊழல் கட்சி என்று பாஜக தூற்றியது. இப்போதோ சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே ஆகிய பாஜகவினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. நிமிடத்துக்கு நிமிடம் ட்விட்டரில் கருத்திடும் மோடி, ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி மவுனம் காப்பது ஏன்?

வியாபம் ஊழல் இந்தியாவின் மிகப்பெரிய ஊழலாக உள்ளது. மன்மோகனின் மவுன பாரம் பரியத்தை மோடியும் பின்பற்றி வருகிறார். மத்திய அரசின் நிலச் சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து செப்டம்பர் 2-ல் இந்திய கம்யூனிஸ்ட் மிகப்பெரிய போராட்டம் நடத்த வுள்ளது. அதற்கு பாஜக ஆதரவு தொழிற்சங்கமான பிஎம்எஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெய லலிதாவை, பிரதமர் மோடி ராஜ் பவனில்தான் சந்தித்திருக்க வேண்டும். மக்கள் பிரச்சினைக்காக சிபிஐ, சிபிஎம் மட்டுமன்றி எல்லா இடதுசாரி கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிபிஐ தமிழக மாநிலக்குழு கூட்டத்தில் மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும், போராட்டக் காரர்கள் மீது தடியடி கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டதாக மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.

SCROLL FOR NEXT