தமிழகம்

பொய்யான பாலியல் புகாரில் கைதான ஆசிரியரை விடுவிக்கக் கோரி பள்ளிக்கு பூட்டு : கிராம மக்கள், மாணவர்கள் தர்ணா

செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே காஞ்சிரங் காலில், பொய்ப் புகாரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் பள்ளிக்குப் பூட்டு போட்டு தர்ணாவில் ஈடு பட்டனர். இதில் மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர்.

காஞ்சிரங்காலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ஆசிரியர் ரெங்கராஜை சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

ஆனால் காஞ்சிரங்கால் கிராம மக்கள், பொய்ப் புகாரில் ஆசிரியர் ரெங்கராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்கக் கோரியும் பள்ளிக்கு நேற்று பூட்டு போட்டனர். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியின் வாசல் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவ, மாணவியரும் பங்கேற்றனர்.

பின்னர், திருப்பத்தூர் சாலையில் கிராம மக்கள், மாணவ, மாணவியர் பஸ் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இவர்களோடு சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.துரை பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கிராம மக்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். அதில், குற்றம் செய்தவர் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர். ஆசிரியர் ரெங்கராஜ் மீது மாணவியின் தாய் பொய் புகார் தெரிவித்துள்ளார். இதில் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆசிரியர் ரெங்கராஜ் குற்றமற்றவர். மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு அதற்காக அரசிடம் இருந்து பரிசுகள் வாங்கியுள்ளார். அவர் மீது வேண்டுமென்றே பொய் புகார் கூறப்பட்டுள்ளது.

உண்மைக் குற்றவாளியை கைது செய்ய போலீஸார் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து சுமார் மூன்று மணி நேரமாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் பள்ளியின் பூட்டை திறந்துவிட்டு மாணவர்களை வீட்டுக்கு அழை த்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT