புதுக்கோட்டை மாவட்டத்தில் சின்னம் மாறியதால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் கோங்குடிப்பட்டி, பாக்குடி, பேராம்பூர் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய 15 ஆவது ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக அதிமுக பிரமுகரான பி.எஸ்.பி.சேகர் என்பவர் 'ஸ்பேனர்' சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இன்று (டிச.27) நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலில் 'ஸ்பேன'ருக்குப் பதிலாக 'ஸ்க்ரூ' சின்னம் அச்சடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சின்னம் மாற்றி அச்சடிக்கப்பட்டு உள்ளதையடுத்து வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சின்னத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் அதுவரை தேர்தல் நடத்தக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாலும், வாக்குச்சாவடிக்குள் அமளியில் ஈடுபட்டு வருவதாலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இவ்வாறு நடந்துள்ளதால் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் பணியில் காவல் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.