தமிழகம்

உள்ளாட்சித்தேர்தல்: ஓரிரு சம்பவங்கள் தவிர அமைதியான முறையில் முதற்கட்ட வாக்குப்பதிவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 9 மாவட்டங்கள், மாநகராட்சிகள் , நகராட்சிகள் தவிர 27 மாவட்டங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைப்பெற்று வருகிறது. ஆங்காங்கே ஓரிரு சம்பவங்கள் நடந்தாலும் பெரும்பாலும் வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் 2016-ம் ஆண்டு நடக்கவேண்டியது ஆனால் 3 ஆண்டுகள் நடத்தாமல் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த மாத முதல்வாரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டுக்கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி கடந்த 16-ம் தேதி நிறைவடைந்தது.

உள்ளாட்சித்தேர்தலில் 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. முதற்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

காலை 7 முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37,830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் , ஆயுத படை காவலர்கள், ஊர்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

இந்தத்தேர்தலில் 4 வித வண்ணங்களில் 4 பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. கிராம ஊராட்சி உறுப்பினர் – வெள்ளை வாக்கு சீட்டு, கிராம ஊராட்சி தலைவர் – இளஞ்சிவப்பு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் – பச்சை நிற வாக்குச் சீட்டு, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - மஞ்சள் நிற வாக்குச்சீட்டு. மேலும் அந்த வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவு முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுதும் காலைமுதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

முதற்கட்டமாக காலை 9 மணி நிலவரப்படி 10.41 % சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது. சில பகுதிகளில் லேசான அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. கிருஷ்ணகிரியில், பாவக்கல் ஊராட்சியின் 21வது வாக்குச் சாவடியில், வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சின்னம் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் தற்காலிக நிறுத்தப்பட்டது.

ராமநாதபுரம், கீழக்கரை அருகே புது மாயாகுளம் பகுதியில் தனி தொகுதி என அறிவிக்கப்பட்டதால் வாக்களிக்க மறுத்து வாக்காளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர், குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் 452 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்ட விராலிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சேகர் பாக்குடி வாக்கு சாவடியில் ஸ்பானர் சின்னம் மற்றும் ஸ்குரு சின்னம் குளறுபடிகளால் அங்கு தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT