தமிழகம் சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ளதை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில், மாநிலங்களின் செயல்திறன்கள், வேளாண்மை மற்றும் துணைத் தொழில்கள், வர்த்தகம் மற்றும் தொழில், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிர்வாகம், சமூக நலம் மற்றும் வளர்ச்சி, நீதி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் ஆகிய 10 பிரிவுகளின் கீழ் நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை, பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 3 வகையாகப் பிரித்து செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
'பெரிய மாநிலங்கள்' என்ற பிரிவில் அனைத்து காரணிகளையும் உள்ளடக்கி நிர்ணயம் செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இந்தியாவிலேயே, தமிழ்நாடு 5.62 மதிப்பெண் பெற்று சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழகம் சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ளதை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (டிச.27) தன் ட்விட்டர் பக்கத்தில், "நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு முதலிடமாம்... இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவையோடு நம்மிடம் இருந்து விடைபெறுகிறது 2019..!" என பதிவிட்டுள்ளார்.