பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இணையம் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கியது. இத்தேர்தல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது.
24 ,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக 702 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 13 ஆயிரத்து 62 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். பாதுகாப்பு பணிக்காக 63 ஆயிரம் போலீசார் பணி அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வாக்குச் சாவடிகளை சென்னையில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இணையம் மூலம் கண்காணிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக 'வெப் ஸ்கிரீனிங்' அறை ஒன்றும் அமைக்கப்பட்டு நேரடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.