தமிழகம்

தாளவாடி மலைப்பகுதியில் கரும்பு தோட்டத்தில் 2 சிறுத்தைக் குட்டிகள் மீட்பு

செய்திப்பிரிவு

தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் இருந்த 2 சிறுத்தைக் குட்டிகளை வனத்துறையினர் மீட்டனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் வசிக்கும் யானை,புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி பயிர்களை சேதப்படுத்துவதோடு கால்நடைகளை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டமுதுகரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ் என்பவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்த தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று காலை கரும்பு வெட்டும் பணிக்காக சென்ற கூலித் தொழிலாளர்கள், பணியில் ஈடுபட்டிருந்த போது, கரும்புத் தோட்டத்தில் இரண்டு சிறுத்தைக் குட்டிகள் விளையாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஜீரகள்ளி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை மீட்டு பராமரித்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி என்பதால் சிறுத்தை கரும்புத் தோட்டத்தில் முகாமிட்டு, குட்டிப் போட்டு இருக்கலாம் என வனத் துறையினர் தெரிவித்தனர்.

கரும்புத் தோட்டத்தில் சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT