தமிழகம்

நீர்வழித் தடங்களில் மிதக்கும் கழிவுகளை அகற்ற நவீன கருவி- சென்னை மாநகராட்சி திட்டம்

செய்திப்பிரிவு

நீர்வழித் தடங்களில் மிதக்கும் கழிவுகளை அகற்ற நவீன கருவியை வாங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் 30 நீர்வழி கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மனிதர்களை கடித்து தொல்லை தரும் கியூலெக்ஸ் கொசுக்கள் உற்பத்திக்கு, நீர்வழிக் கால்வாய்களில் மிதக்கும் கழிவுகள்தான் முக்கிய காரணம் என மாநகராட்சி வல்லுநர்கள் குழு கண்டறிந்தது. அதைத் தொடர்ந்து பொதுப்பணித் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக் கால்வாய்களில் மிதக்கும் கழிவுப் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் மிதக்கும் வடிகட்டிகள் அமைக்கப்பட்டு, அப்பகுதிகளில் வடிகட்டப்படும் கழிவு பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், கொசுத் தொல்லையை தடுக்கும் வகையில், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளை அகற்றும் பணியை மேம்படுத்தும் விதமாக, கழிவுகளை தன்னிச்சையாக சென்சார் மூலம் கண்டறிந்து அகற்றும் நவீன கருவியை வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறும்போது "இந்த நவீன கருவியின் விலை வரிகள் இல்லாமல் ரூ.16 லட்சம். இதை வாங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். அக்கருவியை வாங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது சென்னை மாநகர நீர்நிலை தூய்மையை உறுதிசெய்ய உதவியாக இருக்கும்" என்றார்.

SCROLL FOR NEXT