தமிழகம்

100 நாள் வேலை திட்டத்தில் நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும்: முதல்வருக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்சிராணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, மின்னஞ்சல் மூலமாக முதல்வர் பழனிசாமிக்கு, ஜான்சிராணி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், 2019 ஆகஸ்ட் முதல் கடந்த 5 மாதங்களாக வேலை செய்த மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஊதியம் வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ஊரக வளர்ச்சித் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தொகை வரவில்லை என்று தெரிவிக்கின்றனர். 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

100 நாள் வேலை திட்ட விதிகளின்படி தாமதமாக ஊதியம் வழங்குவதற்கு ஒரு நாளுக்கு 0.05 சதவீதம் ஈட்டுத்தொகை வழங்க வேண்டும். பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் இனியும் தாமதிக்காமல் ஊதியம் மற்றும் ஈட்டுத்தொகை உள்ளிட்ட நிலுவை தொகைகளை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், 2016-ம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளின்படி 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு வேலை நாட்களை 125 நாட்களாக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பிக்கவும் முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT