குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாட்டில் மாபெரும் புரட்சி வெடித்துள்ளது. அரசியல் கட்சிகளால் முடியாததை மாணவர்களும், இளைஞர்களும் சாதித்துள்ளனர் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ அமைப்பின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’யின் ஒருங்கிணைப்பாளர் அருணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, காயிதே மில்லத் கல்வி, சமூக அறக்கட்டளை பொதுச்செயலாளர் தாவூத் மியாகான், கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் ப.சிதம்பரம் பேசியதாவது:
நாட்டு மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை சட்டத்தை 72 மணி நேரத்தில் பாஜக சட்டமாக்கியுள்ளது. தங்களுக்கு முரட்டுப் பெரும்பான்மை இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆணவத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் மாபெரும் புரட்சி வெடித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உட்பட எந்த அரசியல் கட்சியும் காரணமல்ல. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நாளும் மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாக அணிதிரண்டு போராடி வருகிறார்கள். ஜாதி, மதம், மொழி, இனம், மாநிலம் என்று பிளவுபட்டிருந்த மாணவர்கள் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் காப்பாற்றுவதற்காக ஒன்று திரண்டுள்ளனர்.
காந்தியின் இந்தியா, ஹிட்லரின் ஜெர்மனியாக மாறி வருகிறது. இதனைத் தடுக்க நடைபெறும் மாணவர்களின் போராட்டம் தொடர வேண்டும். இதை அரசுக்கும் - முஸ்லிம்களுக்கு இடையே நடைபெறும் போராட்டம் என்பதுபோல சித்தரிக்க பாஜக விரும்புகிறது. அதற்கு நாம் இரையாகி விடக்கூடாது. தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) தான் காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்டது. அதில் 15 விதமான தகவல்கள் கேட்கப்பட்டன. ஆனால், இப்போது பாஜக ஆட்சியில் 21 தகவல்கள் கேட்கப்படுகின்றன. தொடர்ந்து 2-வது முறையாக கிடைத்த ஆட்சி வாய்ப்பை பயன்படுத்தி, இந்தியாவை இந்து தேசமாக்க மோடி அரசு திட்டமிடுகிறது. அனைவரும் ஒன்றிணைந்து இதனை முறியடிக்க வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.