தமிழகம்

காவிரி மேலாண்மை வாரியப் போராட்ட வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜராகவில்லை

செய்திப்பிரிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திருமாவளவன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகல்களைப் பெற்றுக் கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கடந்த 2018 ஏப்ரல் 4-ம் தேதி முழு அடைப்புப் போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தின.

சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியிலிருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனா்.

இதேபோல எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி நடைபெற்ற போராட்டம் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீதும், வைகோ உள்ளிட்டோர் மீது எழும்பூர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, மு.க.ஸ்டாலின், திருமாவளவன், ஜவாஹிருல்லா, சரத்குமார், காதர் மொய்தீன், திருநாவுக்கரசு கராத்தே தியாகராஜன் ஆகியோருக்கு நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டிருந்தார்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திருமாவளவன் மற்றும் கராத்தே தியாகராஜன் ஆஜராகியிருந்தனர். சம்மன் கிடைக்காததால் ஆஜராகவில்லை என ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதைப் பதிவு செய்த நீதிபதி, ஆஜரான திருமாவளவன், கராத்தே தியாகராஜனுக்கு குற்றப்பத்திரிகை நகலை வழங்க உத்தரவிட்டார். அதன்படி, அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன. பின் வழக்கு விசாரணை ஜனவரி 17-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

முன்னதாக, விசாரணையின்போது, சென்னையில் இருக்கும் ஸ்டாலினுக்கு சம்மன் வழங்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய கராத்தே தியாகராஜன், போராட்டத்தில் பங்கேற்காத சரத்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT