குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான திமுக போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால், எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்துப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஸ்டாலின் பேசினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 94 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 95-ம் ஆண்டு அமைப்பு தின விழா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தொழிற்சங்கத் தலைவர், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றிய கே.டி.கே.தங்கமணியின் நினைவு நாள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் ஆர்.நல்லகண்ணுவின் பிறந்த நாள் ஆகிய மூன்று நிகழ்ச்சிகளும் சென்னை தி.நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தா.பாண்டியன், முத்தரசன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நல்லகண்ணுவை வாழ்த்தி பேசிய மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“விரைவில் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடரும். மதச்சார்பற்ற கட்சிகள் மட்டுமல்ல மற்ற அனைவரையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் இந்த நடவடிக்கைகள் தொடங்கும்.
சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்திய பேரணி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பிரம்மாண்டமான பேரணியாக அது நடந்தது. பேரணியில் கலந்து கொண்டதற்காக 8,000 பேர் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள். என்ன வழக்கு போட்டாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
பேரணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. அதற்கு ஆதாரம் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளே சாட்சி. ஆனால் குறைவான எண்ணிக்கையில் கலந்துகொண்டதாக தவறான தகவலை ஆட்சியாளர்கள் பரப்புகிறார்கள்”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.