தமிழகம்

ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர்களை சுவரொட்டி மூலம் எச்சரிக்கும் கிராம இளைஞர்கள் 

சுப.ஜனநாயகச் செல்வம்

ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவோர் ஊழலின்றி நேர்மையாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கம்பூர் ஊராட்சியில் கிராம இளைஞர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் ஊரகப் பகுதிகளுக்கான ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் தலைவர் தேர்தல், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு டிச.27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதில் முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு நேற்றுடன் பிரச்சாரம் முடிவடைந்தது.

இதில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஓட்டு சேகரித்து வருகின்றனர். இதற்கான பல்வேறு உத்திகளை கையாண்டு பிரச்சாரம் செய்தனர். ஆனால், வித்தியாசமாக போட்டியிடும் வேட்பாளர்களில் யார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர், ஊராட்சி நலனின் அக்கறை கொண்டு ஊழலின்றி நேர்மையாக செயல்பட வேண்டும்.

இல்லையெனில் தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் தகவல்கள் பெற்று அம்பலப்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்து கிராம இளைஞர்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

அதனையொட்டி மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சியைச் சேர்ந்த கிராம இளைஞர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அன்பான வேண்டுகோள் என சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

அதில், ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சி வளர்ச்சிக்கு வரும் பணத்தில் எடுத்துவிடலாம் என்று யாரும் நினைத்து வரவேண்டாம்.

கிராம சபை கூட்டங்களில் கம்பூர் ஊராட்சி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் வரவு செலவு கணக்கு கேட்டு அறியப்படும். கேட்டு அறியப்பட்ட அனைத்து தகவல்களும் சரியானதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சரிபார்க்கப்படும்.

மேலும், ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் ஊழல் செய்தவர் பெயர், பதவி, புகைப்படம் போன்றவை சமூக வலைதளங்களில் மற்றும் தமிழக முதல்வர், ஊடகங்கள், மாவட்ட ஆட்சியருக்கு கம்பூர் ஊராட்சி இளைஞர்களால் பகிரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கை சுவரொட்டி தற்போது சமூக வலைதளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT