சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மற்றும் குளித்தலை அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில்களுக்கு ரூ.16 கோடியில் ‘ரோப் கார்’ வசதி ஏற்படுத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, இதுவரை 7,845 கோயில்களுக்கு, ரூ.309.02 கோடியில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.90 கோடியில் பழமையான கோயில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
2016 பிப்ரவரி 22-ம் தேதி நடக்கும் கும்பகோணம் மகாமகத்தை முன்னிட்டு 69 கோயில்களுக்கு ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கோயில்களின் திருப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேரோட்ட விழாக்கள் சிறப்பாக நடக்க 137 தேர்கள் ரூ.22.70 கோடி செலவில் புதிதாக செய்யப்பட்டுள்ளது,
கோயில்களுக்கு சொந்தமான குளங்கள், பொதுமக்களின் நீராதாரமாகவும் திகழ்வதால், ரூ.3.30 கோடி செலவில் 611 கோயில்குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.
சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வேண்டு கோளை ஏற்று ரூ.3.15 கோடியில், 7 நிலை ராஜகோபுரம் புதிதாக கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பக்தர்கள் எளிதாக மலை ஏறும் வகையில் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு ரூ.9.30 கோடியிலும், குளித்தலை அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலுக்கு ரூ.6.70 கோடியிலும் கம்பி வட ஊர்தி (ரோப் கார்) அமைக்கப்பட உள்ளது.
ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை போன்ற விசேஷ காலங்களில் பக்தர்கள் வசதிக்காக அனைத்து கோயில்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை மற்றம் குளியல் அறை, பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.