பிரதமர் நரேந்திர மோடிக்கு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே விவசாயி ஒருவர் கோயில் கட்டியுள்ளார்.
துறையூர் அருகேயுள்ள எரகுடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சங்கர்(50). இவரது மனைவி பானுமதி(40). இவர்களுக்கு தீபா என்ற மகள், சதீஷ்குமார், சூர்யா ஆகிய மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சங்கர் தனது வீட்டின் அருகே பிரதமர் மோடிக்கு கோயில் கட்டியுள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் சங்கர் கூறியதாவது: விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான் சிறுவயதில் இருந்து எம்.ஜி.ஆர் ரசிகன். அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவைப் பிடிக்கும் என்றபோதிலும் மோடி மீதான நல்லெண்ணத்தில் பாஜகவில் உறுப்பினராக உள்ளேன். எனக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். அங்கேயே வீடு கட்டி வசித்து வருகிறேன்.
என் மகள் தீபா மருத்துவராக நினைத்து நன்கு படித்தார். 10-ம் வகுப்பில் 479 மதிப்பெண்களும், பிளஸ் 2-வில் 1,105 மதிப்பெண்களும் பெற்றிருந்தார். ஆனால், 2013-ல் போதிய அளவு கட்-ஆஃப் மதிப்பெண் பெற முடியாததால் அவருக்கு அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவில்லை.
தனியார் கல்லூரிகளில் ரூ.40 லட்சம், ரூ.50 லட்சம் கேட்டனர். இதனால் என் மகளின் மருத்துவர் கனவு சிதைந்தது. இதனால், ஒரு வாரத்துக்கு மேல் அழுதுகொண்டே இருந்த என் மகள், வேறு வழியின்றி அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகத்தில் பி.இ சேர்ந்தார்.
இந்தச் சூழலில்தான், திறமையுள்ள ஏழை மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி பயில வாய்ப்பு கிடைக்க வழி செய்யும் விதமாக பிரதமர் மோடி, நீட் தேர்வைக் கொண்டு வந்தார். என் மகள் படித்தபோதே, இந்த தேர்வு இருந்திருந்தால் நிச்சயம் அவர் வெற்றி பெற்று மருத்துவராகி இருப்பார்.
இதனால் நீட் தேர்வுக்குப் பிறகு மோடி மீதான பற்று அதிகரித்தது. எனவே, வீட்டருகே கோயில் கட்ட முடிவு செய்து பெரிய அளவில் வசதியில்லை என்பதால், அவ்வப்போது விவசாயத்தின் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு இதற்கான பணிகளை செய்தேன்.
துறையூர் தனபாலன் என்ற ஸ்தபதி 2 அடி உயரம், 2 அடி அகலத்தில் மோடியின் சிலையை வடிவமைத்துக் தந்தார். கோயில் கட்டுமான பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. இக்கோயிலைக் கட்ட இதுவரை ரூ.1.25 லட்சம் செலவு செய்துள்ளேன்.
தை மாத அறுவடையில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோரை வைத்து கோயிலைத் திறக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.