அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கு வடை மாலை அலங்காரம் செய்யும் பணியில் கோயில் பட்டாச்சாரியார்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து காலை 5 மணிக்கு ஆஞ்சநேயர் 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தங்க கவசம்
காலை 11 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், மகா தீபாராதனை நடைபெற்றது.
அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயரை வழிபடுவதால் குபேரலட்சமி அருள் கிடைத்து செல்வம் பெருகும், நவகிரக தோஷம் நீங்கி பல நன்மைகள் கிடைக்கும், கல்வி பலம் பல மடங்கு அதிகரிக்கும், மன தைரியம் அதிகரிக்கும் என்பதுஐதீகம். எனவே, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசித்தனர்.
இதையொட்டி, கோயிலில் 2 டன் எடையுள்ள ரோஜா, மல்லிகை, முல்லை, ஜெர்பாரா போன்ற பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
3 நாட்களாக வடை தயாரிப்பு
முன்னதாக, திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அா்ச்சகரான ரமேஷ் தலைமையில் வந்திருந்த 28 அர்ச்சகர்கள் கோயில் வளாகத்தில் உள்ளமண்டபத்தில் கடந்த 20-ம் தேதி முதல் ஆஞ்சநேய சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 3 நாட்கள் இப்பணியை மேற்கொண்டனர்.
இதற்காக 2,200 கிலோ உளுந்துமாவு, 600 லிட்டா் நல்லெண்ணெய், 33 கிலோ சீரகம், 33 கிலோ மிளகு, 125 கிலோ உப்பு பயன்படுத்தப்பட்டது. 25 கிலோ மாவுக்கு1,400 வடைகள் தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியை அடுத்த பஞ்சவடி கிராமத்தில் உள்ள 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2000 லிட்டர் பால், சந்தனம் மற்றும் மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷஏலக்காய் மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள் பாலித்தார்.