அ.வேலுச்சாமி
திருச்சி அருகே வயலில் அறுந்துகிடந்த மின் கம்பியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் விளைநிலங்கள் வழியாகச் செல்லும் மின் பாதைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கீழக்காட்டில் கடந்த டிச.22-ம் தேதி வயலில் மின்கம்பி அறுந்து கிடந்ததை அறியாமல் நெற்பயிருக்கு உரமிடுவதற்காக வயலுக்குச் சென்ற சத்திரப்பட்டி பெரியநாயகி சத்திரத்தைச் சேர்ந்தராமமூர்த்தி (54), இவரது தாய் ஒப்பாயி(70), மகன் குணசேகரன் (23) பரிதாபமாக உயிரிழந்தனர்.
முறையாக பராமரிக்காததால் மின் கம்பி அறுந்து விழுந்து ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து அந்தபகுதிக்கான மின் உதவி பொறியாளர் உட்பட 3 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இச்சம்பவம்போல வேறு எங்கும் நிகழ்ந்திடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், மாநிலம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள்வழியாகச் செல்லும் மின் பாதைகளை ஆய்வு செய்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறும் மின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதனடிப்படையில் தற்போது ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்-ல் புகார் கூறலாம்
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மான கழக திருச்சி பெருநகர மேற்பார்வை பொறியாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: விவசாய நிலங்கள் வழியாகச் செல்லும் மின்பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள், அவற்றில் இருந்து கொண்டு செல்லப்படும் மின்சார கம்பிகள், கம்பிகளை இணைக்கும் சாதனங்கள் போன்றவை சரியான முறையில் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
எங்கேனும் மின் கம்பங்கள் சேதமடைந்திருந்தாலோ, மின்சார கம்பிகள் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தாலோ, பாதுகாப்பற்ற முறையில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தாலோ அவற்றை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மின் கம்பங்கள் சேதமடைந்தால், கம்பிகள் தாழ்வாக அல்லது அறுந்து கிடந்தால், இழுவைக் கம்பிகள் பழுதடைந்தால் பொதுமக்கள் உடனடியாக 1912 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் தெரிவிக்கலாம் அல்லது அந்த காட்சியை வீடியோ அல்லது புகைப்படமாக எடுத்து 94861 11912 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றார்.