தமிழகம்

'நான்  மேயராக வரமாட்டேன்'னு  பேப்பர்ல சொல்லாதீங்க' - உதயநிதியிடம் கோபப்பட்ட நாராயணப்பா

செய்திப்பிரிவு

நான் மேயரால்லாம் வரமாட்டேன்'னு பேப்பர்ல சொல்லாதீங்க என்று உதயநிதி ஸ்டாலினிடம் கோபப்பட்டுள்ளார் நாராயணப்பா.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தச் சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் கண்டனப் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த பேரணியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த 85 வயது முதியவர் நாராயணப்பாவும் கலந்துகொண்டார். பேரணியின் போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து முதியவர் நாராயணப்பாவைச் சந்தித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்துள்ளார் நாராயணப்பா.

இந்தச் சந்திப்பு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், "குடியுரிமை சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற ஓசூரைச் சேர்ந்த 85 வயது நாராயணப்பா தாத்தாவைச் சந்தித்தேன். 'ஓசூர்ல தலைவர் கலைஞர் கட்டித்தந்த சமத்துவபுரத்துல தான் இருக்கேன். உங்களையும் தலைவரையும் பார்த்ததே போதும்' என்றார். 'உங்களை பார்த்ததுல எனக்குத்தான் பெருமை' என்றேன்.

'உங்க எல்லா படங்களையும் பார்த்துடுவேன். நீங்க மேயர் எலெக்‌ஷன்ல நிக்கும்போது நாந்தான் இங்க வந்து உங்களுக்காக வேலை செய்வேன். 'நான் மேயரால்லாம் வரமாட்டேன்'னு பேப்பர்ல சொல்லாதீங்க' என்று செல்லமாகக் கோபப்பட்டவர், 'அடுத்தமுறை வரும்போது கர்நாடகா அவரைக்காய் எடுத்துட்டு வர்றேன்' என்றார்

'எல்லா போராட்டங்களிலும் கலந்துப்பேன். இப்பக்கூட உனக்கு தில்லு இருந்தா என் மேல வழக்கு போடுனு சொல்லிட்டேன்' என்றவரிடம், 'உங்களுக்கு என்னங்கய்யா வேணும்' என்றேன். 'ஓசூர் போனதும் சொல்றேன்: என்றபடி என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். இந்த பிணைப்புதான் திமுக" என்று தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

SCROLL FOR NEXT