புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருவிக்கொண்டான்பட்டியில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமலேயே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
குருவிக்கொண்டான்பட்டி ஊராட்சியில் சுமார் 750 வாக்காளர்கள் உள்ளனர். செட்டி நாட்டு கலாச்சாரம் மிகுந்த இந்த ஊராட்சியில் எண்ணிக்கையின் அடிப்படையில் நகரத்தார்கள் அதிகமாகவும் மற்ற சமூகத்தினர் அடுத்தடுத்த நிலையிலும் உள்ளனர்.
ஊராட்சித் தலைவர் மற்றும் 6 வார்டு உறுப்பினர் பதவி களைக் கொண்ட இந்த ஊராட் சியில் உள்ளாட்சி அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை தேர்தல் நடத்தா மலேயே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் வாய்ப்பை வெவ்வேறு சமூகத்தினருக்கு அளித்து, சுழற்சி முறையில் ஊர் மக்கள் கூடி ஒருமனதாகத் தேர்வு செய்து வருகின்றனர்.
இம்முறை வைத்தியநாதன் என்பவரின் மனைவி விசாலாட்சி ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று, 6 ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து குருவிக் கொண்டான்பட்டி கிராமத்தினர் கூறியதாவது:
கட்சி அடிப்படையில் அல்லாமல் ஊர் மக்களே கூடி தங்களுக்கான உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்து வருகின்றனர்.
இதுவரை எங்களுக்குள் எவ்வித கருத்து வேறுபாடுகளும் வந்ததில்லை. எவ்வித ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் வெளிப்படைத் தன்மையுடன் நிர்வாகம் நடத்தப் படுகிறது.
மேலும், ஊர் மக்களுக்கிடையே ஒற்றுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பேராசையின்மை போன்றவைதான் பதவிக்காகப் போட்டி என்பதற்கு இங்கு வாய்ப்பு கொடுக்கப்படாததற்கு காரணங்களாக விளங்குகின்றன.
மேலும், ஒவ்வொருவரிடமும் உள்ள தனித் திறமைகளை சுயநலமின்றி ஊரின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தி வருகிறோம்.
அதேபோன்று ஊரின் வளர்ச்சிக்காக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்களை சந்திப்பதாக இருந்தாலும், அலுவலர்களைச் சந்திப்பதாக இருந்தாலும் கட்சி பேதம் பாராமல் கிராமத்தினர் என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறோம்.
இவ்வூருக்குப் போதுமான அளவு பேருந்து வசதி இல்லை என்பதைத் தவிர மருத்துவமனை, சாலை, பள்ளி, வங்கிக் கிளை, அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன என்றனர்.