திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நேற்று வழிபாடு செய்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். 
தமிழகம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திருநள்ளாறு கோயிலில் சுவாமி தரிசனம்: நீர்நிலைகளை மேம்படுத்திய ஆட்சியர்களுக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தாருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் வந்தார்.

நேற்று காலை ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு திருநள்ளாறு வடக்குபுறவட்ட சாலை அருகே அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் இறங்குதளத்தை வந்தடைந்தார். குடியரசுத் தலைவருடன் ஒரே ஹெலிகாப்டரில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் வி.நாராயணசாமி ஆகியோரும் வந்தனர். பாதுகாப்புக்காக மேலும் 2 ஹெலிகாப்டர்கள் வந்தன.

அங்கிருந்து வாகனம் மூலம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் புறப்பட்டுச் சென்றார். அங்கு, அமைச்சர் எம்.கந்தசாமி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரை வரவேற்றனர்.

தொடர்ந்து தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை அம்பாள், சனி பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது மனைவி, மகளுடன் சுவாமி தரிசனம் செய்தார். சனி பகவான் சன்னதியில் தில தீபம்ஏற்றி வழிபட்ட அவருக்கு மரியாதை செய்யப்பட்டு பிரசாதம்வழங்கப்பட்டது. பின்னர் பகல் 12 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

நீர்நிலைகளை மேம்படுத்தவும், நீர் வளத்தைப் பெருக்கவும் காரைக்கால், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்கள் முன்னெடுப்பில் ‘நம் நீர் காரைக்கால்', ‘நீரும் ஊரும் புதுச்சேரி' ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

இதுகுறித்த ஒரு ஆவணப் புத்தகத்தை திருநள்ளாறு கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவரிடம் புதுச்சேரி முதல்வர் வழங்கினார்.

மேலும் இதுகுறித்த சிறிய ஒளிப்படக் காட்சியும் திரையிடப்பட்டது. இவற்றைப் பார்த்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காரைக்கால் ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா,புதுச்சேரி ஆட்சியர் டி.அருண் ஆகியோரை தனிப்பட்ட முறையில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT