காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கடந்த ஆண்டு போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட 7 பேர் விசாரணைக்கு நாளை ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 2018 ஏப்ரல் 4-ம் தேதி முழு அடைப்பு, ஆர்ப்பாட்டம் நடத்த திமுக அழைப்பு விடுத்தது. அன்றைய தினம், சென்னை சிம்சன் பகுதியில் ஒன்றுகூடிய திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மெரினா கடற்கரை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், நடுரோட்டில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர் திருநாவுக்கரசர், கராத்தே தியாகராஜன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சமக தலைவர் சரத்குமார், காதர் மொய்தீன் உட்பட 3 ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் இந்த சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், சரத்குமார் உள்ளிட்ட 7 பேரும் 26-ம் தேதி (நாளை) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.