அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: கோப்புப்படம் 
தமிழகம்

முஸ்லிம்கள் எங்கள் தாய், தந்தையர் போன்றவர்கள்; பாதிப்பு வராது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

செய்திப்பிரிவு

முஸ்லிம்கள் எங்கள் தாய், தந்தையர் போன்றவர்கள் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

"தமிழகத்தின் 99 சதவீத கிராமங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவது என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, 99 விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்திருக்கிறது. மக்களின் ஆதரவு அதிமுகவுக்கு சிறப்பாக இருக்கிறது.

உள்ளாட்சி உட்பட எல்லா துறைகளிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு விருதுகளைக் குவித்து வருகிறது. முதல்வர் பழனிசாமி மக்கள் கேட்ட அனைத்துத் திட்டங்களையும் கொடுத்துள்ளார். 50 ஆண்டு காலத்தில் இல்லாத வளர்ச்சியை இந்த 5 ஆண்டு காலத்தில் அதிமுக அரசு கொடுத்துள்ளது. பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டும், நிலம் கையகப்படுத்தப்பட்டும் வருகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது. இங்கு இருக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என, முதல்வர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சி அரசியல் செய்கிறது. அதற்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் அப்படித்தான் செய்வார்கள்.

கோவை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களுக்குப் பாதிப்பு வருவதை நாங்கள் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்? முஸ்லிம்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை. அவர்கள் தமிழர்கள், இந்தியர்கள். என் ஓட்டுநர் முஸ்லிம்தான். தாய், தந்தையர் போன்று அவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்குப் பிரச்சினை என்றால் எங்களுக்கு பிரச்சினை வந்தது போன்று. அவர்களுக்கு பாதிப்பு நேராமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ளும்".

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT