குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த திமுக தலைமையிலான பேரணி, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு இன்று (டிச.24), சென்னை சிம்சனில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், நாளை, (டிச.25) கீழ்வெண்மணி படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை, சேப்பாக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துக் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருமாவளவன் மேலும் பேசியதாவது:
"அறவழியில் நாம் போராட வேண்டிய தேவை இருக்கிறது. சனாதன சக்திகளை வீழ்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. மக்களைக் கூறு போடும் பாஜக அரசுக்கும், அதற்குத் துணைபோகும் அதிமுகவுக்குப் பாடம் புகட்டும் வகையில், உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.
நேற்று திமுக நடத்திய பேரணி தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான மைல்கல். கட்சி சார்பற்றவர்களும் பெருவாரியாகப் பங்கேற்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கக்கூடிய மாபெரும் பேரணி. இது வெற்றி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் குற்றம் சொல்கிறார்கள்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, இன்று ஜனநாயக சக்திகள் கட்சி சார்பற்றுப் போராடி வருகின்றன. இதனை மத்திய பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ளும் என நான் நம்புகிறேன்.
இன்று பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டும், நாளை கீழ்வெண்மணி படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டும், சென்னை சேப்பாக்கத்தில் நாளை குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துக் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.