திமுகவின் பேரணியில் கலந்துகொண்டவர்கள் இந்த மண்ணில் இருக்க அருகதையற்றவர்கள் என, பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
சென்னை, கமலாலயத்தில் இன்று (டிச.24) ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்துப் பேசியதாவது:
"திமுக உள்ளிட்ட கட்சிகள் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை எழுப்புகின்றன. அதற்கு வெளிநாட்டவர்கள் சட்டம்-1946 உள்ளது. நேபாளத்தின் இந்துக்களுக்கும், பூடான் நாட்டைச் சேர்ந்த பவுத்தர்களையும் ஏன் இச்சட்டத்தில் சேர்க்கவில்லை என இதுவரை கேள்வி எழுப்பாதது ஏன் எனத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு இதுபற்றித் தெரியாது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட 6 மதத்தினரையும் மதவெறி ஓநாய்களுக்குத் தூக்கியெறிந்த பாவத்துக்கு இச்சட்டம் பிராயச்சித்தம் செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த 6 மதத்தினருக்கு முதல் எதிரி ஸ்டாலின் தான். கருணாநிதிக்கு அரசியல் ஞானம் அதிகம். அதனால்தான் தான் இறக்கும் வரை ஸ்டாலினை திமுகவுக்கு தலைவராக்கவில்லை.
ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி உண்மையை எடுத்துச் சொல்ல பாஜக முடிவெடுத்திருக்கிறது.
சோனியா காந்தியின் குடியுரிமையைக் கூட ரத்து செய்ய மாட்டோம். அதனால், காங்கிரஸ் தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம்.
நடைபெற்று முடிந்த திமுக பேரணிக்கு வயதானவர்கள் வர வேண்டாம் என, உதயநிதி தன் தந்தைக்கும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். திமுகவும் திராவிடர் கழகமும் வன்முறையின் வித்தகர்கள். கட்சிகளின் பொய்யான பிரச்சாரத்தால், அறியாமையால் மாணவர்கள் போராடுகின்றனர்.
ஆவணங்கள் இல்லாமல் இந்தியா வருபவர்கள் இங்கு இருக்க வேண்டும் எனப் பேசுவதே முழு தேசத்துரோகம். நேற்று திமுக பேரணியில் இருந்தவர்கள் இந்த மண்ணில் இருக்க அருகதையற்றவர்கள்.
இச்சட்டத்துக்கு எதிராக கமல் பேசியிருக்கிறார். உலக நாயகனாக இருப்பது போதாது. உலக அறிவு வேண்டும் என ஏற்கெனவே சொன்னேண். அதனால், திமுக பேரணியில் கலந்துகொள்ளாமல் புத்தகம் படிப்போம் என கமல் முடிவெடுத்திருக்கலாம்.
இந்த விஷயத்திற்குப் போராட்டமே நடத்தக் கூடாது. இதற்கு எதிர்க்கருத்து சொல்வதே தேசத்துரோகம்".
இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.