டிஜிட்டல் இந்தியாவில் இண்டர்நெட் இருக்காதுன்னு சொல்லவே இல்லையே என்று இணையதளச் சேவை நிறுத்தத்தைக் கிண்டல் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்தச் சட்டத்துக்கு மேற்கு வங்கம், டெல்லி, பிஹார், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் போராட்டக் களத்தில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின.
இதனால் பல்வேறு இடங்களில் இணையதளத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவில்தான் அதிகமுறை இணையச் சேவை துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், "பிரதமர் மோடி, தன் முந்தைய சாதனையை அடுத்தடுத்த ஆண்டுகளில் அவரே முறியடிக்கிறார். 2017-ல் 79 முறை, 2018-ல் 134 முறை என முன்னேறி பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை மண்ணைக் கவ்வ வைக்கிறார்.
இச்சாதனை இணையச் சேவை நிறுத்தத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை இணையத்திலும் நெரிக்கப்படுகிறது. ஜனநாயக விரோதச் சட்டங்களை எதிர்த்து, மக்கள் நடத்தும் போராட்டங்களை முடக்க இணையப் பணி நிறுத்தத்தை ஆயுதமாகக் கையில் எடுக்கிறது அரசு. டிஜிட்டல் இந்தியாவில் இண்டர்நெட் இருக்காதுன்னு சொல்லவே இல்லையே" என்று தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.