பெரியாரை விமர்சித்த ட்விட்டர் பதிவை தமிழக பாஜக நீக்கியது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'அந்த பயம் இருக்கட்டும்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பெரியாரின் 46-வது நினைவு நாள் இன்று (டிச.24) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, இன்று (டிச.24) சென்னை, சிம்சனில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்களைத் தூவி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதனிடையே, பெரியார் மணியம்மையை திருமணம் செய்துகொண்டதை விமர்சித்து, பெரியார் மணியம்மையுடன் இருக்கும் புகைப்படத்தை தமிழக பாஜக, அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன. மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் இதனை விமர்சித்தனர்.
இதையடுத்து, அந்தப் பதிவை ட்விட்டர் பக்கத்திலிருந்து தமிழக பாஜக நீக்கியது.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக.
அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?" எனப் பதிவிட்டுள்ளார்.