ஈரோட்டுப் பூகம்பம் வெடித்துக்கொண்டே தான் இருக்கிறது என, பெரியார் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரியாரின் 46-வது நினைவு நாளையொட்டி, இன்று (டிச.24) சென்னை, சிம்சனில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்களைத் தூவி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன், மக்களவை திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பெரியாரின் நினைவு நாளையொட்டி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், "ஈரோட்டுப் பூகம்பம் என முத்தமிழறிஞர் போற்றிய அறிவாசான் தனது அறிவுப்பயணத்தை நிறுத்தி அரைநூற்றாண்டு ஆனது. ஆனாலும் அது வெடித்துக்கொண்டே தான் இருக்கிறது. தமிழினம் உணர்வு பெற அந்த வெப்பம் மேலும் பல நூற்றாண்டுகளுக்குத் தேவை! அவரது பாடங்கள் கைகாட்ட நமது பயணம் தொடரும்! வாழ்க" என பதிவிட்டுள்ளார்.