கமுதி அதிமுக நிர்வாகி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள். 
தமிழகம்

கமுதி அதிமுக நிர்வாகி வீட்டில் ரூ.38.63 லட்சம் ரொக்கம், 1192 மதுபாட்டில்கள் பறிமுதல்: தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கின

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அதிமுக முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் வீட்டில் ரூ.38.63 லட்சம் ரொக்கம் மற்றும் 1,192 வெளிமாநில மது பாட்டில்களை போலீஸார், தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கமுதி அரசு மருத்துவமனை அருகே கமுதி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அதிமுகவை சேர்ந்த பாலு மற்றும் அவரது தந்தை ஒப்பந்ததாரர் தர்மலிங்கம் வசித்து வருகின்றனர். பாலு அதிமுக சார்பில் கமுதி ஊராட்சி ஒன்றியம் மண்டலமாணிக்கம் 6-வது வார்டு வேட்பாளராக போட்டியிடுகிறார். தர்மலிங்கத்தின் மனைவி ராணியம்மாள் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு தர்மலிங்கம் வீட்டில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக ஏராளமான பணம் மற்றும் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் கமுதி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்படி டிஎஸ்பி மகேந்திரன், ஆய்வாளர் கஜேந்திரன், பறக்கும்படை வட்டாட்சியர் ஜமால் முகமது மற்றும் போலீஸார், நேற்று பிற்பகல் தர்மலிங்கத்தின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்து ரொக்கம் ரூ. 38,63,700 மற்றும் 1,192 வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஒப்பந்ததாரர் தர்மலிங்கத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT