ராமனைப் போல் இன்ப, துன்பங்களை சமமாக பாவிக்க மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
மயிலாப்பூர் சாவித்திரி அம்மாள் கீழ்த்திசை மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பரதநாட்டிய பயிற்சி கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து அப்பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான அறநெறி வகுப்பில் பங்கேற்று, ‘ராமன் பெற்ற கல்வி’ என்ற தலைப்பில் பேசியதாவது:
ராமன் நடத்தையால் உயர்ந்தவன். அவனைப் பற்றி பாடப்படுவதுதான் கம்ப ராமாயணம். இதில் ஒவ்வொரு இடத்திலும், மிகப் பெரிய பதவியில் இருக்கும்போதும் ராமன் எப்படி எளிமையாக இருந்தான், எளியோரை மதித்து எப்படி நடந்துகொண்டான் என்பதை கம்பர்விவரித்துள்ளார். மேலும், இன்பம் வரும்போது மகிழ்ச்சி அடையாமலும், துன்பம் வரும்போது சோர்வடையாமலும், இந்த இரு நிலைகளையும் சமமாக பாவித்தவன் ராமன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராமாயணத்தில் சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற இருந்த நேரத்தில், “உனக்கு கீழ் உள்ள கடைநிலை ஊழியரைக்கூட ஏளனமாக எண்ணாதே” என ராமன் சுக்ரீவனுக்கு அறிவுரை கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரினங்கள் மீது அன்பு
ராமன் உயிரினங்கள் மீது அன்பு கொண்டவர். அவர் நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு வழிமுறைகளை கூறிச் சென்றுள்ளார். அதை கடைபிடிக்க மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவரும், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே.சந்துரு, பஞ்சாப் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்ணன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா தேவன், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், பள்ளியின் செயலர் டி.சுரேஷ், தலைமை ஆசிரியர் சொ.பொ.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி ஐயர் சம்ஸ்கிருத கல்வி அறக்கட்டளை அறங்காவலர் ரமேஷ் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.