அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கேக் வெட்டியும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதிமுக சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா நடத்தப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
62 ஆண்டுகள் பழமையான இந்த கருணை இல்லத்தில், 140 முதியோர் வசித்து வருகின்றனர். அமல அன்னையின் சலேசிய மறைப்பரப்பு சபை கன்னியர்களால் இந்த இல்லம் நடத்தப்பட்டு வருகிறது.
இங்கு அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க வந்த விருந்தினர்களை வரவேற்கும் வகையில் குலைதள்ளிய வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அங்குள்ள அருட்சசோதரிகள் ஆரத்தி எடுத்தும், கருணை இல்லத்தின் பொறுப்பாளர் பெலிசி அருட்சகோதரி மரியா அவர்களுக்கு மலர் கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
பின்னர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் அங்குள்ள குழந்தை இயேசு குடிலை பார்வையிட்டனர்.
இதையடுத்து, தொடங்கிய கிறிஸ்துமஸ் விழாவில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் ஜான் ஸ்டீபன் சிறப்பு பிரார்த்தனை செய்தார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, கருணை இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு சேலைகள், சட்டைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். மேலும், கருணை இல்லத்தில் வாட்டர் ஹீட்டர், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் நிறுவதற்காக, காசோலைகளை வழங்கினார்.
உணவு அருந்தினர்
இதைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அங்குள்ள முதியவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர். விழா நிறைவில் முதல்வர் அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த விழாவில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக அமைப்பு செயலாளர் ஜேசிடி பிரபாகர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் ஜான் மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.