நடிகர் தனுஷ் நடித்த '3' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் சம்பந்தமாக காப்புரிமையை மீறியது தொடர்பாக சோனி மியூசிக் நிறுவனத்துக்கு எதிராகப் பட நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நடிகர் தனுஷ் நடித்து, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘3’ திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல், படம் வெளியாகும் முன் உலக அளவில் பிரபலமடைந்தது. இந்தப் பாடலின் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையைப் பெற்ற சோனி மியூசிக் நிறுவனம், காப்புரிமையை மீறி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பாட்லை வெளியிட்டதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக சோனி மியூசிக் நிறுவனம், அதன் இயக்குநர் சுமித் சட்டர்ஜி மற்றும் நிறுவன அதிகாரிகள் அஸ்வின், அசோக் ஆகியோருக்கு எதிராக, '3' படத் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே.புரொடக்ஷன்ஸ், சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை எடுத்துக் கொண்ட எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம், சோனி மியூசிக் நிறுவன அதிகாரிகளை ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்தும், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், சோனி நிறுவனம், அதன் இயக்குநர் சுமித் சட்டர்ஜி மற்றும் நிறுவன அதிகாரிகள் அஸ்வின், அசோக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், சோனி மியூசிக், அதன் இயக்குநர் சுமித் சட்டர்ஜி மற்றும் நிறுவன அதிகாரிகள் அஸ்வின், அசோக் ஆகியோர் ஒப்பந்த விதிகளை மீறிச் செயல்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் இருப்பதால், அவர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து, சோனி நிறுவன அதிகாரிகளுக்கு விலக்களித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 2013-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கை, மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒத்துழைக்காவிட்டால், நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் விலக்களித்த உத்தரவு, தானாக ரத்தாகி விடும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.