திண்டுக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்வில் தங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்காததால் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்டது.
பட்டியலை திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்டு தொகுதிவாரியாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை வாசித்தார். பின்னர் பட்டியலை வெளியிட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.
இதையடுத்து தனக்கு ‘வீடியோ கான்பரன்சிங்’ இருப்பதாக கூறி கூட்ட அரங்கில் இருந்து ஆட்சியர் உடனடியாக புறப்பட்டுச் சென்றார். தேர்தல் குறித்த தங்கள் சந்தேக கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஆட்சியர் சென்றுவிட்டாரே என்று கூறி அங்கிருந்த ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், தேர்தல் தாசில்தார் சுப்பிரமணியபிரசாத் ஆகியோரிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்கள் சந்தேகங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.
ஒரே வீட்டில் உள்ள வாக்காளர்களில் இருவர் ஒரு வார்டுக்கும் மற்ற இருவர் வேறொரு வார்டிலும் வாக்களிக்கவேண்டிய நிலை உள்ளது. இந்த குளறுபடிகள் குறித்து நேரிலும், ஆன்லைனிலும் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை, இதற்கு விளக்கமும் கூறப்படவில்லை., என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்ற நிர்வாகி கந்தசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு சரிவர அதிகாரிகள் பதில் சொல்லாததால், நாங்கள் யாரிடம் சென்று கேட்பது, ஆட்சியரும் எழுந்து சென்றுவிட்டார். நீங்களும் பதில் சொல்லவில்லை எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பி வாக்குவாத்ததில் ஈடுபட்டார்.
இதையடுத்து உங்கள் புகார் குறித்த நடவடிக்கை எடுக்க செய்கிறோம் என அதிகாரிகள் கூறினர். வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடுவதற்கு கடமைக்காக எங்களை ஏன் அழைத்தீர்கள், எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல இங்கு யாரும் இல்லை எனக் கூறி அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.