ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதிமுக முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பாலு மற்றும் அவரது தந்தை தர்மலிங்கம் ஆகியோர் வீடுகளில் இருந்து ரூ.38.லட்சத்து 67.ஆயிரத்து 300 மற்றும் 1,192 வெளி மாநில மதுப்பாட்டில்களை கமுதி போலீஸார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கமுதி அரசு மருத்துவமனை அருகே கமுதி ஒன்றிய குழு தலைவர் அதிமுகவை சேர்ந்த பாலு மற்றும் அவரது தந்தை ஒப்பந்ததாரர் தர்மலிங்கம் வசித்து வருகின்றனர்.
பாலு அதிமுக சார்பில் மண்டலமாணிக்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். தர்மலிங்கத்தின் மனைவி ராணியம்மாள் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இந்நிலையில் மாவட்ட எஸ்.பி. வருண்குமாருக்கு பாலு, தர்மலிங்கம் வீடுகளில் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா மது பாட்டில் வினியோகம் செய்வதாற்காக பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீஸார் தேர்தல் பரக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டிலிருந்து ரூ.38.லட்சத்து 67.ஆயிரத்து 300 மற்றும் 1,192 வெளி மாநில மதுப்பாட்டில்களை கமுதி போலீஸார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட குற்ற சம்பவங்கள், புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் தெரிவிக்க எஸ்.பி. பிரத்யேக தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த எண்ணில் வந்த தகவலின் அடிப்படையிலேயே எஸ்.பி. உத்தரவின் பேரில் இந்த ரெய்டு நடந்துள்ளது.