அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான இன்றைய விடுப்பு (23-ம் தேதி) ரத்து செய்யப்படுகிறது. அனைத்து ஊழியர்களும் பணிக்கு வரவேண்டுமென சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சென்னை யில் இன்று பேரணி நடத்தமுடிவு செய்துள்ளன. இதில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கத்தினர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இதனால்,மாநகர பேருந்து சேவை பாதிக்கப்படாமல் இருக்க போக்குவரத்து ஊழியர்கள் இன்று விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை
இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநகர போக்குவரத்துக் கழகம், அத்தியாவசியான போக்குவரத்து சேவையை முழுவதுமாக பொறுப்பேற்று நடத்தும் நிறுவனம். இதற்கு மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பொறுப்பு உள்ளது.
எனவே, போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் 23-ம்தேதி (இன்று) வழக்கம் போல்பணிக்கு தவறாமல் ஆஜராக வேண்டும். 23-ம் தேதிக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
வார விடுமுறை
மேலும், வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ள வர்களும் கட்டாயம் பணிக்கு ஆஜராக வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.