தொலைக்காட்சி, கைப்பேசி மற்றும் சமூக வலைதளத்தில் மூழ்கி கிடக்கும் மாணவ மாணவியருக்கு மத்தியில், தாய் தந்தையின் வழிகாட்டுதலுடன் அனைவரும் பயன்பெறும் வகையில் ‘தினமும் ஒரு தகவல்’ என்ற தலைப்பில், வீட்டின் முன்பு கரும்பலகையில் தினமும் எழுதி வருகின்றனர். சிகை அலங்காரம் செய்யும் தொழிலாளியின் குழந்தைகளான திவ்யாஸ்ரீ, கமலேஷ் ஆகியோர்.
அவர்கள் கூறும்போது, “திருவண்ணாமலை தாமரை நகர் 23-வது தெருவில் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் முறையே 8-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு படிக்கிறோம். தந்தை செந்தில்குமார், சிகை அலங்காரம் செய்யும் தொழிலாளி. தாய் ரத்னா, பிளஸ் 2 வகுப்பு படித்துவிட்டு, தொலைதூர கல்வியில் பிபிஏ படித்துள்ளார். அவர், போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்காக படித்து வருகிறார். அப்போது அவருக்கு கிடைத்த தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். அதை, நாங்கள் கரும்பலகையில் எழுதி, வீட்டின் முன்பு வைத்துவிடுவோம்.
‘தினமும் ஒரு தகவல்’ மற்றும் ‘இன்றைய சொல்’ என்ற தலைப்பில் எழுதி வைப்போம். இந்த செயலை கடந்த 6 மாதங்களாக செய்து வருகிறோம். அதற்கு முன்பு எங்களது அம்மா ரத்னா, 2 ஆண்டுகளாக எழுதி வந்தார். அவரிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். விடுதலை போராட்டத் தலைவர்கள், அறிஞர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பிறந்த தினம், சர்வதேச தினம் உட்பட பல்வேறு தகவல்களை இணையதளத்தில் திரட்டி, ‘இன்று’ என்ற தலைப்பிலும், உடல் ஆரோக்கியம் மற்றும் நேர்மறையான வாசகங்களை ‘இன்றைய சொல்’ என்ற தலைப்பிலும் எழுதி வைக்கிறோம்.
திருக்குறளும் வாசிப்போம்
மேலும், ‘தினமும் ஒரு திருக்குறள்’ என்ற தலைப்பில், இன்றைய நாள், அதாவது தமிழ் மாதத்தின் பெயர் மற்றும் தேதியை குறிப்பிட்டு திருக்குறள் மற்றும் அதன் பொருள் குறித்து வாசிக்கிறோம். அதை செல்போனில் பதிவுசெய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்கிறோம். அதை பார்க்கும் பலரும் எங்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். பள்ளி வகுப்பு முடிந்ததும், நாளை என்ன எழுத வேண்டும் என்பதை தயார் செய்து வைத்துக் கொள்வோம்.
புத்தகங்களை வாசிப்போம்
அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாள் உற்சவம் குறித்து தினசரி எழுதினோம். அதேபோல் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பண்டிகை மற்றும் அவர்களது முக்கிய நாட்களை எழுதி வைப்போம். நாங்கள் தொலைக்காட்சி பார்ப்பதும், செல் போனில் விளையாடுவதும் கிடையாது. சக நண்பர்களுடன் வீதியில் விளையாடி மகிழ்வோம்” என்றனர்.
நல்ல விஷயங்களை புகுத்திவிட்டால்..
இதுகுறித்து அவர்களது தாய் ரத்னா கூறும்போது, “பிள்ளைகளுக்கு தொடக்கத்திலேயே, அவர்களது மனதில் நல்ல விஷயங்களை புகுத்திவிட்டால், தவறான திசைக்கு செல்லமாட்டார்கள்.
புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருப்பதால், புத்தகக் கண்காட்சிக்கு செல்லும்போது ஒரு புத்தகத்தையாவது வாங்கி வந்துவிடுவேன். தொலைக்காட்சி மற்றும் செல்போனில் நேரத்தை செலவிடுவது கிடையாது. எங்களது முயற்சிக்கு என் கணவர் துணையாக இருக்கிறார்” என்றார்.