தமிழகம்

சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை கிலோ ரூ.90- சில்லறை கடைகளில் ரூ.140 வரை விற்பனை

செய்திப்பிரிவு

கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை கிலோ ரூ.90 ஆக நீடித்து வருகிறது. வெளிச் சந்தைகளில் சில்லறை விலையில் கிலோ ரூ.140 வரை விற்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பருவம் தவறிய மழை காரணமாக வெங்காயம் உற்பத்தி குறைந்தது. தேசிய அளவில் வெங்காய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் இம்மாநிலங்களில் உற்பத்தி குறைவு காரணமாக நாடு முழுவதும் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்தது. டெல்லியில் அதிகபட்சமாக ரூ.200 வரை உயர்ந்தது. சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் ரூ.160 வரை உயர்ந்தது. வெளிச் சந்தைகளில் சில்லறை விலையில் ரூ.200 வரை விற்கப்பட்டது.

இதற்கிடையில் எகிப்து வெங்காயம் வருகை, ஈரப்பதம் மிகுந்த ஆந்திர வெங்காயம் வருகை காரணமாக கோயம்பேடு சந்தையில் அதன் விலை குறையத் தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக கிலோ ரூ.90 அளவிலேயே நீடித்து வருகிறது. ஜாம் பஜார், பெரம்பூர், சைதாப்பேட்டை போன்ற சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.140 வரை விற்கப்பட்டு வருகிறது.

பண்ணை பசுமை கடைகளில் தரமில்லாத வெங்காயங்கள் கிலோ ரூ.55-க்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அரசு அறிவித்தபடி, வடசென்னை பகுதிகளில் இயங்கும் பல்வேறு நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் கிடைக்கவில்லை. அக்கடைகளுக்கு வெங்காயம் வாங்கச் செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான தக்காளி, முள்ளங்கி, முட்டைக்கோஸ் தலா ரூ.15, சாம்பார் வெங்காயம் ரூ.150, கத்தரிக்காய், பீன்ஸ், புடலங்காய் தலா ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.33, அவரைக்காய், கேரட் தலா ரூ.45, வெண்டைக்காய் ரூ.40, பாகற்காய், பீட்ரூட் தலா ரூ.25, முருங்கைக்காய் ரூ.200, பச்சை மிளகாய் ரூ.13 என விற்கப்பட்டு வருகிறது.

வெங்காய விலை குறித்து கோயம்பேடு சந்தை மொத்த வியாபாரிகள் கூறும்போது, வரும் ஜனவரியில் வெங்காய வரத்து அதிகரித்து, அதன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT