தமிழ்நாடு, அந்திரா, கர்நாடகா என 3 மாநிலத்திலும் தொடர் திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையரை கைது செய்த தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
சென்னை அண்ணாநகர் பகுதியில் பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளை நடந்து வந்தது. இதுதொடர்பாக 14 வழக்குகள் பதிவானது. இதில் தொடர்புடைய கொள்ளையனை பிடிக்க அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம், சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் பிரபல ரவுடியான திருவாரூர் முருகனின் கூட்டாளி. இவர் மீது ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் திருட்டு வழக்குகள் உள்ளன’’ என்றனர். இந்நிலையில், சுரேஷை கைது செய்த தனிப்படையைச் சேர்ந்த ஆய்வாளர் கண்ணன், உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ், ஜாபர் உசேன் மற்றும் தலைமைக் காவலர்கள் உள்ளிட்டோர் நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்.