திமுக பேரணிக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வாராகி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அவசர வழக்காக உடனடியாக விசாரிக்கப்பட உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாளை சென்னையில் பேரணி நடத்த உள்ளன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரையில் திமுக தொடர்ந்து போராடும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) திமுக நடத்தும் பேரணிக்குத் தடை விதிக்கக் கோரி இந்திய மக்கள் மன்றத்தின் சார்பில் வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், ''திமுக நடத்தும் பேரணியால் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படக்கூடும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். இதனால் இந்தப் பேரணிக்குத் தடை விதிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு அவசர வழக்காக தற்போது விசாரிக்கப்பட உள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் நீதிமன்றத்தில் விடுமுறைக்கான சிறப்பு அமர்வில் நீதிபதிகள் வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் வழக்கை விசாரிக்கின்றனர்.