உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு பொங்கல் பரிசை வாங்கிக்கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கரூரில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசும்போது, ''முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கினார். ஆனால், கொடுக்கக்கூடாது என்று திமுகவினர் கூறினர். இந்த ஆண்டும் ரூ.1000 வழங்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. இப்போதும் திமுகவினர் கொடுக்கக்கூடாது என்கிறார்கள். பொங்கல் பரிசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டிருக்கலாம். இப்போது ஓட்டு போட்டுவிட்டு பொங்கல் பரிசு வாங்கிக் கொள்ளலாம்.
கொடுக்கக்கூடிய அரசு ஜெயலலிதாவின் அரசு. மக்களின் வரிப்பணத்தை எடுத்து பரிசு கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அரசு என்றால் மக்கள் வரிப்பணத்தில் இருந்துதானே கொடுக்க முடியும்'' என்றார்.
ஓட்டு போட்டுவிட்டு பரிசு வாங்கிக் கொள்ளலாம் என்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுக்குப் பரிசு கொடுப்பதாகவே அமைச்சர் கூறியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசு பின்னணி
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. முதலில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், பின்னர் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இதேபோல் இந்த ஆண்டும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கடந்த அக்.26-ல் முதல்வர் கே. பழனிசாமி அறிவித்தார். எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலை இருந்ததால், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் அறிவித்தார். இந்நிலையில், பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கும் என அதிமுகவினர் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க மாநிலத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துவிட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் பகுதிகளை ஒட்டியுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்க அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடை பெறாத 9 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.