ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பெண்கள் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு குறித்த மாராத்தான் போட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், ''குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடும் மாணவர்களின் குரல்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு செய்யப்படும் துரோகம்'' என்றார்.
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்து வருவது குறித்து தமிழச்சை தங்கபாண்டியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ''ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. பல ஆண்டுகளாக நம் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் தங்கியிருப்பவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்து வருகிறோம்'' என்று தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.
முன்னதாக, இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை விடுத்தார். இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், உரிய நேரத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அமித் ஷா உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.