தமிழகம்

அரபிக்கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் 

செய்திப்பிரிவு

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த சுழற்சியில் தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:

''தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் அரபிக்கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.

சனிக்கிழமை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 9 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 8 செமீ, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி மாவட் டம் ராதாபுரம் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, தூத்துக்குடி, மணியாச்சி, சாத்தான்குளம், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஆகிய இடங்களில் தலா 5 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பூதபாண்டியில் 4 செமீ மழை பெய்துள்ளது''.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT