கோவையில் 2 டன் கலப்பட டீ தூளை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோவை ஈச்சனாரி, ரத்தினம் கல்லூரி அருகே சி.வி.ராமன் இன்டஸ்டிரியஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள குடோனில் டீ தூளில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் நேற்று அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குடோனில் 54 மூட்டைகளில் கலப்பட டீ தூள் பதுக்கிவைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ரூ.4 லட்சம் மதிப்புள்ள கலப்பட டீ தூள், பாக்கெட்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. டீ தூளை விற்பனைக்காக எடுத்துக் கொண்டிருந்த குனியமுத்தூரைச் சேர்ந்த அப்துல் ஹமீது (42) என்பவரிடம் விசாரித்தபோது, குடோன் உரிமையாளர் பெயர் ஷெரீஃப் என்பதும், 3 ஆண்டுகளாக அங்கு விற்பனை நடைபெறுவதும் தெரியவந்தது. ஆய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பின்னர், குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக டாக்டர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது: சுந்தராபுரம், போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டீ கடைகளுக்கு இந்த கலப்பட டீ தூளை விற்பனை செய்துள்ளனர்.
தரம் குறைந்த டீ தூளை வாங்கி அதில் செயற்கை நிறமூட்டிகளைச் சேர்த்து விற்பனை செய்கின்றனர். கலப்பட டீ தூளை பயன்படுத்தும் டீ கடைகளிலும் கலப்படம் என்று தெரிந்தேதான் பயன்படுத்துகின்றனர். கலப்பட டீ தூளை பயன்படுத்துவதால் கூடுதலாக டீ போடலாம் என்பதால், கடைக்காரர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது
புற்றுநோய் பாதிப்பு
செயற்கையான வண்ணங்களை ஐஸ்கிரீம், சாக்லெட் போன்றவற்றில் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அளவு 100 பிபிஎம்-க்கு (பார்ட்ஸ் பெர் மில்லியன்) மேல் இருக்கக்கூடாது. ஆனால், கலப்பட டீ தூளில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளின் அளவு சுமார் 2,000 பிபிஎம்-க்கு மேல் இருக்கின்றன.
குறிப்பாக டார்டெரசின், கார்மோசின், சன் செட் யெல்லோபோன்ற நிறமூட்டிகளை சேர்க்கின்றனர். இந்த நிறமூட்டிகளை பயன்படுத்தும்போது டீயின் தன்மை இருக்கிறதோ இல்லையோ, நிறம் மட்டும் அடர்த்தியாக தெரியும்.அதில் அசல் டீயின் ஃபிளேவரும்இருக்கும். சிலர் சுவைக்காகஇந்த டீயை தொடர்ந்து பருகுகின்றனர். கலப்பட டீ தூள் கொண்டு தயாரிக்கப்படும் டீயை தொடர்ந்து பருகி வந்தால் நாளடைவில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
மக்களே மாதிரியை சேகரிக்கலாம்
கலப்பட டீ தூளை விற்பனை செய்வோர் மீது உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 59 (1)-ன் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்து, அதிகபட்சம் 6 மாதம் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். டீ கடைக்காரர் மீது சந்தேகம் இருந்தால் பொதுமக்களே கடையில் இருந்து டீ தூள் மாதிரியை சேகரித்து உணவுப்பாதுகாப்புத்துறைக்கு அனுப்பவும் சட்டத்தில் இடம் உள்ளது. மக்கள் கேள்வி கேட்டால் மட்டுமே கலப்பட டீ தூள் பயன்பாட்டை குறைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.