தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சூரிய கிரகணம் பார்க்கும் கண்ணாடி மற்றும் கையேடு வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை கணித அறிவியல் மைய விஞ்ஞானி ஆர்.ராமானுஜம், அறிவியல் இயக்க நிர்வாகிகள் வி.ராமமூர்த்தி, எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், எஸ்.சுப்பிரமணி, சி.ராமலிங்கம், ஆர்.ஜீவானந்தம் ஆகியோர். படம்: ம.பிரபு 
தமிழகம்

டிசம்பர் 26-ல் சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக கண்டுகளிக்க ஏற்பாடு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 2 லட்சம் கண்ணாடிகள் விநியோகம்

செய்திப்பிரிவு

வானியல் அபூர்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் டிசம்பர் 26-ம் தேதி காலை 8 முதல் 11.15 மணி வரை நிகழ உள்ளது. சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பாதுகாப்பாக கண்டுகளிக்கும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 2 லட்சம் கண்ணாடிகள் விநியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை கணித அறிவியல் மைய விஞ்ஞானி ஆர்.ராமானுஜம், தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் பொதுச்செயலாளர் சி.ராமலிங்கம் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் டிசம்பர் 26-ம் தேதி அபூர்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம். சூரியனின் மையப்பகுதியை மட்டும் மறைத்து விளிம்பில் நெருப்பு வளையம்போல் ஒளி தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணமாகும். கிரகணத்தின்போது வெறும் கண்களால் சூரியனைப் பார்க்கக் கூடாது. எனவே, பாதுகாப்புடன் சூரிய கிரகணத்தை கண்டுகளிப்பதற்காக பிரத்யேக கண்ணாடிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தயாரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மூலம் 2 லட்சம் சூரிய கிரகண கண்ணாடிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. சூரிய கிரகண நாளில் பொதுமக்கள் வழக்கம்போல் வெளியே வரலாம். தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபடலாம். கிரகணத்தின் போது சாப்பிடுவதாலோ, கர்ப்பிணிகள் மீது சூரிய கதிர்கள் படுவதாலோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாறாக, அரிய வானியல் இயற்கை நிகழ்வான சூரிய கிரகணத்தை அனைவரும் பாதுகாப்பான முறையில் கண்டுகளிக்க வேண்டும். இதற்காக சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின்போது தமிழ்நாடு அறிவியல் இயக்க பொதுச்செயலாளர் எஸ்.சுப்ரமணி, நிர்வாகிகள் ஆர்.ஜீவானந்தம், எம்.எஸ்.ஸ்டீபன் நாதன், உதயன், வி.ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

வளைய சூரிய கிரகண நிகழ்வு குறித்து சென்னை பிர்லா கோளரங்க வளாகத்தில் மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், விஞ்ஞான் பிரச்சார் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் டிசம்பர் 26-ம்தேதி காலை 8 முதல் 11.15 மணிவரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. சரியாக 9.30 மணிய அளவில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் வளைய சூரிய கிரகணம் முழுமையாக தெரியும். இந்நிகழ்வு 3 நிமிடம் வரை நீடிக்கும். மாநிலத்தின் பிற பகுதிகளில் பகுதி அளவில் தெரியும்.

இந்த அபூர்வ நிகழ்வை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. தொலைநோக்கி அல்லது எக்ஸ்ரே ஷீட்களை கொண்டும் பார்க்கக்கூடாது. சூரிய வெளிச்சத்தை குறைக்கும்தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்து பார்க்கலாம். கிரகணத்தை பார்வையிட சென்னை உட்பட 11 மாவட்டங்களில் அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கூகுள் ப்ளே ஸ்டோரில் ‘Annular solar eclipse’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கிரகணம் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT