தமிழகம்

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளைப் பயன்படுத்தி சசிகலா வாங்கிய ரூ.1500 கோடி மதிப்புள்ள சொத்துகள் தொடர்பான மதிப்பீடு முடிந்தது: உயர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை தகவல்

செய்திப்பிரிவு

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைப் பயன்படுத்தி சசிகலா வாங்கிய ரூ.1,500 கோடி மதிப்புள்ள சொத்துகள் தொடர்பான மதிப்பீடு பணிகள் முடிந்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யக்கோரி சசிகலா தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி, பினாமிகள்பெயரில் பல கோடி ரூபாய்க்குசசிகலா சொத்துகள் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அந்த சொத்துகளை முடக்கிய வருமானவரித் துறையினர் சசிகலாவின் கடந்த 2012-13 முதல் 2016-17 வரையிலான வருமான வரிக் கணக்குகளை மதிப்பீடு செய்யும் நடைமுறைகளை மேற்கொண்டது.

இந்நிலையில், வருமான வரி மதிப்பீடு தொடர்பாக விசாரிக்கப்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரியும், தனக்கு எதிராக திரட்டப்பட்ட ஆவணங்களை வழங்கக் கோரியும் .சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில், ‘‘கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 9 அன்று சசிகலாவின் உறவினரான கிருஷ்ணப்பிரியா வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிருஷ்ணப்பிரியாவின் செல்போனில் 2 துண்டு சீட்டுகளின் படங்கள் இருந்தன. அதில்பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வரவு செலவுகள் குறித்த விவரங்கள் இருந்தன. அந்த துண்டு சீட்டுகளை சசிகலாவின் வழக்கறிஞரான செந்தில் எழுதியிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளைப் பயன்படுத்தி சென்னை பெரம்பூர் மற்றும் மதுரை கே.கே.நகரில் உள்ள ஷாப்பிங் மால்கள், புதுச்சேரியில் ரிசார்ட், கோவையில் பேப்பர் மில், செங்கல்பட்டு அடுத்த ஒரகடத்தில் சர்க்கரை ஆலை, ஓஎம்ஆர் சாலையில் சாப்ட்வேர் நிறுவனம், 50 காற்றாலைகள் என ரூ.1,500 கோடி மதிப்பில் பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராகவும், பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

சசிகலா பரோலில் வந்தபோது கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது இந்ததுண்டு சீட்டுகளை கிருஷ்ணப்பிரியா தனது செல்போனில் படம் எடுத்து வைத்துக் கொண்டதாகவும் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். சசிகலா மீதான இந்தகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமானவரித் துறை தனது மதிப்பீட்டு பணிகளை முடித்து, அதுதொடர்பான விவரங்களை இணையத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது. எனவே இதுதொடர்பாக யாரையும் குறுக்கு விசாரணை செய்யத் தேவையில்லை என வாதிடப்பட்டது.

அதையடுத்து, சசிகலா தரப் பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT