அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி இளைஞர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி அளித்து அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பணியாற்றி வருகிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.
அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா கொண்டாட்டத்தின் தொடக்க விழா சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். இவ்விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியின் சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அழகப்பா தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இப்பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக இயங்கி வருகிறது. 1944-ம் ஆண்டு வெறும்43 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம்ஆண்டுதோறும் 800 மாணவர்கள் சேர்ந்து பயிலக் கூடிய பெரிய கல்லூரியாக வளர்ந்துஉள்ளது.
இதன் பழைய மாணவர்கள் வேதியியல், ஜவுளி தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் மிகப்பெரிய தொழிலதிபர்களாக திகழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி ஏராளமான முதல் தலைமுறை தொழிலதிபர்களையும் இக்கல்வி நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். எனவே, இளைஞர்கள் நம் நாட்டின் மிகப்பெரிய சொத்து. அவர்களுக்கு நல்ல முறையில் பயிற்சி அளித்து மக்கள் பணியில் ஈடுபடுத்தினால் நம்மால்பெரிய அளவிலான மாற்றத்தை உருவாக்க முடியும்.
அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் தொழில்நுட்பக் கல்வி அளித்து அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பணியாற்றி வருகின்றன. பழைய மாணவர்கள் இக்கல்வி நிறுவனத்துக்குபல்வேறு வழிகளில் உதவிசெய்து வருவது பாராட்டுக்குரியது.
இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவரும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும், பவளவிழா கொண்டாட்டக் குழுத் தலைவருமான என்.சீனிவாசன் பேசும்போது, “தனித்துவமான இக்கல்லூரியில் புதிய தொழில்நுட்பம் குறித்து படித்தது புதிய அனுபவமாக இருந்தது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னைசூப்பர் கிங்ஸ் விளையாடும்போது அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கு தனி இடம்ஒதுக்கப்படும்" என்று அறிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே.சுரப்பா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் வித்யா சங்கர் நன்றி கூறினார்.