தமிழகம்

4.78 லட்சம் ஏக்கர் கோயில் நிலத்தில் 600 ஏக்கர் நிலம் மட்டுமே ஏழைகளுக்குப் பட்டாவாக அளிக்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள 4.78 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்களில் 600 ஏக்கர் நிலங்கள் மட்டும் 20 ஆயிரம் ஏழைக் குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப் பயன்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்குப் பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி ராதாகிருஷ்ணன், சத்தியநாராயணன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி, தமிழக வருவாய்த் துறை தரப்பில் கூடுதல் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்த கூடுதல் பதில் மனுவில், “பல ஆண்டுகளாக கோயில் நிலங்களில் வசித்தவர்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்குப் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களில், 19 ஆயிரத்து 717 குடும்பங்கள் நீண்டகாலமாக ஆக்கிரமித்து வசித்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களில், 600 ஏக்கர் நிலங்கள் மட்டுமே ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பட்டா வழங்கும்போது கோயிலின் வருமானத்திற்கும், பூஜைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல், எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்த பிறகே, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு நிலங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, பட்டா வழங்கப்படும்.

கோயில் நிலத்தை எடுப்பதற்காக வழங்கப்படும் இழப்பீடு மற்றும் விலை ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயைத் தொகுப்பு நிதியாக வைத்து, கோயில் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளுக்குப் பயன்படுத்த முடியும் .

கோயில் நிலத்தில் வசித்தவர்களுக்குப் பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி, வழக்கைத் தள்ளுப்படி செய்ய வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

SCROLL FOR NEXT